வெளிநாடுகளிலிருந்து ரூ. 25 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த 6 பேரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
வெளிநாடுகளிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பெருமளவில் போதைப் பொருட்கள் கடத்திக் கொண்டுவரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் கடந்த சில தினங்களாக வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 31ஆம் தேதி அதிகாலை வியட்நாம் நாட்டின் வினோய் நகரிலிருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கோலாலம்பூர் வழியாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. பணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர பரிசோதனை மேற்கொண்டபோது, கேரளாவைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை தனியாக அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதனால் இருவரின் உடமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பார்சல்களில் ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர் ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. சுமார் 11 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இருவரும் கடத்தல் குருவிகளாக செயல்பட்டதும், கஞ்சாவை விமான நிலையத்திற்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் ஒப்படைக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில் மேலும் ஒரு பயணியும் இவர்களுடன் கஞ்சா கடத்திவந்ததும், ஆனால் அந்த பயணி சோதனையில் சிக்காமல் விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும் தெரியவந்தது. உடனடியாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை பிடிக்கும் நடவடிக்கைகளில் இறங்கினர்.
அதிகாரிகளின் தீவிர தேடுதல் வேட்டையில் விமான நிலையத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அந்த பயணியை பிடித்து அவரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. மொத்தம் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் சர்வதேச மதிப்பு சுமார் 15 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடத்தல் குருவிகளிடமிருந்து கஞ்சாவை பெற, விமான நிலையத்திற்கு வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து அந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதேபோல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் இதேபோல் உணவு பார்சல்களில் கஞ்சாவை கடத்தி வந்தனர். அவர்களிடம் தீவிர பரிசோதனை மேற்கொண்டு சுமார் 10 கோடி மதிப்புள்ள 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் இருவரும் கடத்தல் குருவிகளாக மட்டுமே செயல்பட்டதாகவும், குறிப்பிட்ட ஒரு நபரிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொள்ள இருந்ததாகவும் தெரிவித்தனர். இவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
அடுத்தடுத்து 2 வழக்குகளில் கேரளாவைச் சேர்ந்த 6 இளைஞர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே பட்டப்படிப்பு முடித்திருந்தும், சரியான வேலைவாய்ப்பு வருமானம் இல்லாததால் இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

