சுற்றுசூழல்தமிழ்நாடுபயணம்

மனம் கவரும் கலை வண்ணம்! வணக்கம் இது நம்ம சென்னை!

மூளை முடுக்குகளில் சந்துகளில் அழுக்குப் படிந்த சுவர்களில் மேம்பால தூண்களில்… இல்லை! இல்லை! நம் உள்ளங்களிலும் வர்ணம் தீட்டி சிங்கார சென்னையின் சாலைகளையே ஒரு கவிப்பொருளாக மாற்றியமைத்துள்ளது சென்னை மாநகராட்சி.

யாருக்கும் இடையூறு இல்லாமல் மனம் கவர் சித்திரங்களைக் கொண்டு நம் மனதை கவர்ந்து வருகிறது சென்னை மாநகராட்சி. இந்த ஓவியங்களை வரைவதற்காக சுமார் 70 ஆயிரம் சுவரொட்டிகளை மாநகராட்சியினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.

சுவர்களிலும் ரிப்பன் பில்டிங் எதிரே அமைந்துள்ள ஈவிஆர் பெரியார் சாலையிலும்  தமிழ்நாட்டின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் கலை, கல்வி, மக்கள், பழங்கால கட்டிடங்கள், பாரம்பரியமிக்க கோவில்களின் ஓவியங்கள், நாகரிகம்,  விவசாயம் என அனைத்து தலைப்புகளிலும் ஓவியங்களை காண முடிகிறது.

சுவர்களுக்கு அழகு கூட்டுவது மட்டுமல்லாமல் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரத்தையும் இந்த சித்திரங்கள் தடுக்கும் என மாநகராட்சியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
அழிந்துவரும் தமிழகத்தின் கலைகளை சித்திரங்களில் காணும் போது ஏதோ ஒரு விதத்தில் நம்மால் அவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.
ஒரு பெரிய சுவற்றில் இரண்டு மழலையர் சிரிக்கும் முகங்கள் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கின்றன. சுனாமியால் தாக்கப்பட்ட நினைவுகளை தூசி தட்டி எழுப்பி அதிலிருந்து நாம் மீண்டும் வந்த கதையையும் சொல்கிறது மற்றுமொரு சித்திரம்.
காப்பாளர் வழங்குநர் என்ற குறிப்புகளோடு வரையப்பட்டிருக்கும் கையில் நீர் குவளையை ஏந்தி இருக்கும் ஒரு பெண்ணின் சித்திரம் அங்கு வாழும் மீனவ இனத்தை சேர்ந்த பெண்டிரின் அடையாளமாக திகழ்கிறது.
கடந்த திங்கட்கிழமை சென்னை மேயர் ஆர்.ப்ரியா அவர்கள் கண்ணகி நகரில் உள்ள கட்டிடங்களில் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஸ்டார்ட் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து வரைந்துள்ள ஓவியங்களை திறந்து வைத்தார்.
ஓவியங்கள் கதை சொல்லும்! உடன் பயணிக்கும்! உள்ளம் வெல்லும்!

Related posts