ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2 ஆம் நாள் உலக ஆட்டிசம் தினம் – ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ் ஆர்டர் ஒரு தனி மனிதனின் பேச்சாற்றலையும் முடிவெடுக்கும் திறனையும் ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடும் திறனையும் ஒருசேர பாதிக்கும்.
கற்றல் மற்றும் கற்பித்தல் திறன் குறைபாடு, வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாமை ஆகியவை ஆட்டிசத்தின் அறிகுறிகள். ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளானவர்கள் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வர்.
ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்களது சமூகப் பங்களிப்பின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் நல்கும் மருத்துவ உலகத்தையும் தன்னார்வலர்களையும் போற்றும் விதத்திலும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா சபையின் அதிகாரப்பூர்வமான 7 நாட்களில் உலக ஆட்டிஸம் தினமும் ஒன்றாகும்.
ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளானவர்களது உரிமைகளையும் அவர்களுக்கு முறையான மருத்துவ வழிகாட்டுதலையும் வழங்கும் விழிப்புணர்வு நோக்கத்தோடு கொண்டாடப்படும் இந்நாளின் அடையாளம் நீல நிறமாகும். குழந்தைகள் விளையாடும் புதிர் கணக்கு சின்னமாகும்.
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல. நரம்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாடு மட்டுமே. ஆட்டிசம் குறிப்பிட்ட ஜீன் குறைபாட்டாலும் மருந்துகளாலும் பெரும்பாலும் ஏற்படும். வயது முதிர்ந்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளிலும் ஆட்டிசம் காணப்படுகிறது.
ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பேசுவதில் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களுக்கான முறையான புரிதலும் அவர்களை ஏற்றுக் கொள்ளும் சமூகமும் இக்காலத் தேவை.
