யானைகள் தாக்கி அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவற்றை கட்டுப்படுத்த தவறிய வனத் துறையை கண்டித்து தாளவாடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக – கர்நாடக மாநில எல்லையான தாளவாடியை அடுத்த அருள்வாடியில் நேற்று தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகளை விவசாயிகள் விரட்டினர். அப்போது விவசாயி மகேஷ் (28) என்பவர் யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக தாளவாடி பகுதியில் கடந்த சில மாதங்களுக்குள் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் யானை தாக்கி தொடர்ந்து உயிரிழந்துள்ளார்கள். அதை வனத்துறை சிறிதும் கண்டு கொள்வதில்லை என்றும், வனத்திலிருந்து வெளியேறிய யானைகளை கட்டுபடுத்த தவறிய வனத் துறையைக் கண்டித்தும் தாளவாடி பொதுமக்கள் உயிரிழந்த மகேஷின் சடலத்துடன் அருள்வாடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 12 மணி நேரம் நடந்த போராட்டத்தின் போது ஆசனூர் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் கார்கே நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட வன அதிகாரி யோகேஷ் குமார் கார்கேயிடம் தாளவாடி விவசாயிகள் சங்கத் தலைவர் கன்னையன் வனத்துறை மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார்.
அப்போது அவர், “தமிழ் தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர் வனத்துறை அதிகாரியாக நியமிக்கப்படுவதால் யானைகளால் மக்கள் படும் இன்னல்களைக் குறித்து தெளிவாக எடுத்துரைக்க முடியவில்லை. ஆகவே வனத்துறையில் நன்கு படித்த ஊழியரை மொழி பெயர்ப்பாளராக நியமித்து, மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும்.
தற்போது யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார். இது வரை இந்த பகுதியில் 5 பட்டியலின இளைஞர்கள் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். இரு மாநில எல்லையில் கர்நாடக போலீசை பார்த்தால் யானை ஓடுகிறது. ஏனென்றால் ரப்பர் புல்லட் வைத்திருப்பதால் ஓடுகிறது. ஆனால் ஆயுதமின்றி ரோந்து பணியில் ஈடுபடும் தமிழ்நாடு போலீசை பார்த்தல் ஜீப்பை யானை துரத்துகிறது.
யானை தாக்கி உயிரிழந்தால் கர்நாடகத்தில் ரூ.20 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கப்படுகிறது. தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் விதிகளின் படி யானை தாக்கி உயிரிழக்கும் நபருக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

