‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பெறும் விவகாரத்தில் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மனுவை வாபஸ் பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கோரி கடந்த 2025 டிசம்பர் 18ஆம் தேதி, தயாரிப்பு நிறுவனம் சார்பில் தணிக்கை வாரியத்துக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தை ஏற்று, படத்தை பார்வையிட்ட தணிக்கை வாரியம் சில காட்சிகளை நீக்கினால் படத்துக்கு U/A 16+ சான்றிதழ் வழங்கப்படும் என டிச. 22ஆம் தேதி பரிந்துரை செய்தது.
இதன் அடிப்படையில், சில காட்சிகளை நீக்கிய தயாரிப்பு நிறுவனம், டிச. 24ஆம் தேதி தணிக்கை சான்றிதழுக்காக படத்தை மீண்டும் அனுப்பியது. இதையடுத்து, ஜனநாயகன் படத்துக்கு U/A 16+ சான்று வழங்க முடிவு செய்திருப்பதாக தணிக்கை குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இறுதியாக, ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர், கதையை தணிக்கை வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முயன்றபோது முடியவில்லை. இதையடுத்து, படத்தில் வெளிநாட்டு சதி மற்றும் பாதுகாப்பு படை சின்னம் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் இருப்பதால் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படக்குழுவுக்கு தணிக்கை வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏற்கனவே சில காட்சிகள் நீக்கப்பட்டு, UA 16+ சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்ட பின், திடீரென படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப தணக்கை வாரியம் முடிவு செய்ததை எதிர்த்து படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்ததுடன், உடனே UA 16+ சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
மேலும், வேறு கோரிக்கையுடன் தனி நீதிபதியிடம் படக்குழு புதிதாக மனு தாக்கல் செய்யலாம். அந்த மனு மீது தணிக்கை வாரியத்துக்கு போதுமான அவகாசம் அளித்து, தணிக்கை சான்றிதழ் வழங்குவதா? வேண்டாமா? என தனி நீதிபதி உத்தரவிடலாம் என ஜன 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், நீதிமன்ற விசாரணைகளை தவிர்த்து, மறு ஆய்வுக்கே செல்ல முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம், வழக்கை வாபஸ் பெறும் வகையில் நீதிமன்ற பதிவாளரிடம் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவானது, நீதிபதி பி.டி ஆஷா முன்பு முதல் வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, படக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். படக்குழுவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மனுவை திரும்ப பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

