சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுவதை தடுக்க META நிறுவனம் தங்களின் WhatsApp, Facebook தளங்களில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பகுதிநேர வேலை சலுகை விலையில் பொருட்கள் முதலீட்டு வாய்ப்புகள் டிஜிட்டல் கைது என பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன.
கடந்த 2024ல் மட்டும் இது போன்ற சைபர் மோசடிகளில் சிக்கி இந்தியர்கள் 22,800 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதே போல் இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே வரை 7,000 கோடி ரூபாய்க்கு மேல் பொது மக்கள் இழந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த மோசடிகள் பெரும்பாலும் WhatsApp, Facebook தளங்கள் மூலம் நடக்கின்றன.
இந்நிலையில் இந்த செயலிகளில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அதன் தாய் நிறுவனமான META அறிமுகப்படுத்தியுள்ளது.
WhatsApp அறிமுகம் இல்லாத நபர்களுடன் வீடியோ அழைப்பில் பேசும்போது மொபைல் போன் திரையை பகிரும் பயனர்களுக்கு இனி எச்சரிக்கை செய்தி காட்டப்படும்.
இது இணைய மோசடி கும்பல் வங்கி விபரங்கள் அல்லது OTP எண்களை திருட பயன்படுத்தும் வழிமுறை.
Facebook செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மோசடியை கண்டறியும் அமைப்பு அறிமுகமாக உள்ளது.
புதிய தொடர்பில் இருந்து வரும் குறுந்தகவல்கள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும்.
மேலும் மூத்த குடிமக்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வை தீவிரப்படுத்தும் நோக்கில் நாட்டின் முக்கிய நகரங்களில் பயிற்சி முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

