கரூர் அருகே காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? நடந்தது என்ன?
கரூர் மாவட்டம் நெரூர் செல்லும் சாலையில் உள்ள காளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 19ஆம் தேதி இரவு நேரம் செல்போன் பயன்படுத்தியதைப் பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி, வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது. மறுநாள் காலை எழுந்த பெற்றோர், மகளை காணவில்லை என்று பதறினர். மகளை எங்கு தேடியும் கிடைக்காததால் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில் ஊர் முழுக்க தேடுதலில் ஈடுபட்டு, பின்னர் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் மாணவியின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து மாணவியின் உடலை மீட்ட போலீசார், கரூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இறப்புக்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சம்பவ இடத்தில் கரூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் ஏதாவது உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். தொடர் விசாரணை நீடிக்கும் நிலையில், உடற்கூராய்வு முடிவு வரும்பட்சத்தில், மாணவியின் மரணத்தில் உள்ள பல்வேறு முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

