Editor's Picksதமிழ்நாடு

பாஜக என்னை மரியாதையாகவே நடத்துகிறது ; வி.பி துரைசாமி விளக்கம்!

பாரதிய ஜனதா கட்சியில் தாம் மரியாதையாகவே நடத்தப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார் அக்கட்சியின் துணை தலைவர் வி.பி துரைசாமி.

தமிழக சட்டப்பேரவையில் 2022 – 23 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கை குறித்து பல விமர்சனங்களை முன்வைத்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, தேர்தல் சமயத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை எனக்கூறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார். அதில் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி பேச நிகழ்வில் முற்படுகையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்ட மேடைக்கு வரவே அவரது பேச்சு தடைபட்டது. இதனால் கோபமடைந்த துரைசாமி தமது அதிருப்தியை அருகிலிருந்து நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தினார். தொடர்ந்து மேடையில் துரைசாமிக்கு அருகில் இருந்த அக்கட்சியின் எம்எல்ஏவான காந்தியின் தோல் மீது அவர் கை வைக்க முயல, துரைசாமியின் கையினை கோபமாக தட்டிவிட்டார் எம்எல்ஏ காந்தி.

மேற்கண்ட இந்த சம்பவங்கள் துரைசாமி பாஜகவில் புறக்கணிக்கப்படுவதையே காட்டுவதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வரத்தொடங்கிய நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ள துரைசாமி, பாஜகவில் எனக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. தனது தோள்பட்டையில் பூச்சி உட்கார்ந்ததாக நினைத்தே எனது கையை தட்டிவிட்டார் எம்எல்ஏ காந்தி என தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைவதற்கு முன்னதாக, திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்துவந்தவர் வி.பி துரைசாமி. இவர் சட்டப்பேரவை துணை சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.