12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனை நேற்று மாலை பாளையங்கோட்டை சிறையில் அடைத்த நிலையில், இன்று திடீரென மதுரை சிறைக்கு காவல்துறையினர் மாற்றம் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா முன்பு நேற்று (மார்ச் 20) பிற்பகல் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, வரும் ஏப்ரல் 02ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, தர்ம முனீஸ்வரனை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இன்று திடீரென அவரை மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்தனர். பல்வேறு பாதுகாப்பு விஷயங்களுக்காக கைதியை சிறை மாற்றம் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மார்ச் 10ஆம் தேதி மாணவி காணமல் போன நிலையில், மறுநாள் மதியம் 2 மணியளவில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளியை கைதுசெய்யும் வரை, சடலத்தை வாங்கமாட்டோம் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, குற்றவாளிகளைப் பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்குரிய 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகளைப் பெற்று அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
இதனிடையே, காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை வைத்து மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை சம்பவம் நடைபெற்ற 9 நாட்களுக்கு பிறகு மார்ச் 19ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்திருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவரை, காவல்துறையினர் திடீரென மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

