விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி மக்கள் சந்திப்பை நடத்தினார். விஜய்யை பார்ப்பதற்காக அந்த கூட்டத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.
அப்போது துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளியில் எங்கும் செல்லாமல் நீலாங்கரை வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 3 நாட்களாக எந்த பேட்டியும் கொடுக்காமல் இருந்து வந்த விஜய், கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று தனது மவுனத்தை கலைத்தார். நடந்த சம்பவம் குறித்தும், தனது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் குறித்தும் விஜய் சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.
அந்த வீடியோவில் கரூரில் எங்களுக்கு தரப்பட்ட இடத்தில்தான் பேசினோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று விஜய் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் விஜயின் பிரச்சாரம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
தலைமை நிலையச் செயலகம்
தமிழக வெற்றிக் கழகம்

