கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்; ஆனால் விஜய் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் திருச்சியில் பேட்டியளித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்று, சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு முன்னதாக வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், “கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்டோம். இந்த முறை கூடுதல் இடங்களை கேட்டிருக்கிறோம். பேச்சுவார்த்தையின்போது அது இறுதி செய்யப்படும்” என்றார்.
திமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேசுகையில், “ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில் அவர்களுக்கான இடங்கள், கோரிக்கைகள் அடிப்படையில் கூட்டணியில் இணைவார்கள். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.
திமுக அரசு நினைத்திருந்தால் 41 பேர் மரணத்திற்கு விஜய் தான் காரணம் எனக் கூறி, அவரை கைது செய்திருக்க முடியும். ஆனால் முதலமைச்சர் அதை செய்யவில்லை. அவர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். ஆனால் விஜய் தொடர்ந்து பொய்யான கருத்துக்களை கூட்டங்களில் பேசி வருகிறார்.
யாரோ எழுதிக் கொடுப்பதைதான் அவர் பேசி வருகிறார். அப்படியிருக்கையில், விஜய் சிறந்த முறையில் ஆட்சி செய்வார் என நம்பும் கூட்டத்தை பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது. விஜய்க்கு தமிழ்நாட்டின் புவியியல் அரசியலும் தெரியவில்லை, சமூக அரசியலும் தெரியவில்லை, நிர்வாக முறையும் தெரியவில்லை. எந்த நடிகராக இருந்தாலும் அவரைப் பார்க்க மக்கள் வரத்தான் செய்வார்கள்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள் பேசாத அளவுக்கு விஜய் தற்பெருமை பேசுகிறார்.அவர் பேச்சு நகைப்புக்குறியாதாகத்தான் இருக்கிறது. விஜய்யின் பேச்சுக்கள் அவரின் அனுபவமின்மையை தான் காட்டுகிறது” என்றார்.

