சூரிய ஒளி மின்சக்தி, லித்தியம் போன்ற துறைகளுக்கு நாட்டில் கிடைக்கும் முக்கிய கனிமங்கள் முதுகெலும்பாக உள்ளன என்று மத்திய நிலக்கரி, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற முக்கிய கனிம வளங்கள் தொடர்பான கருத்தரங்கில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி பேசியதாவது: நாட்டில் கிடைக்கும் முக்கிய கனிமங்கள் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன. உலகப் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் முக்கிய கனிம வகைகள் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன.
இந்த ஆண்டு ஜனவரியில் முக்கியமான கனிமங்களின் பட்டியலில் கோக்கிங் வகை நிலக்கரியும் சேர்க்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் நிரந்தர காந்தங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழில்நுட்பம் தனியார் துறைக்கு மாற்றப்பட்டதன் மூலம், உற்பத்தி இப்போது தொடங்கியுள்ளது.
மேலும், நாட்டில் அரிய வகை நிரந்தர காந்தங்கள் (ஆர்இபிஎம்) தயாரிப்பும் இந்த ஆண்டிலேயே தொடங்கும். இது மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி துறைகளுக்கு தேவையான முக்கியமான கனிமங்களில் தன்னிறைவை நோக்கிய ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது. சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

