ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்தது தனக்கு வேதனையளிப்பதாகவும், அவர் சிந்தித்திருக்க வேண்டுமென்றும் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கே.ஏ. செங்கோட்டையன், “அதிமுக கோட்டையான பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியை தவெக கோட்டையாக மாற்ற வேண்டும். அதிமுக எஃகு கோட்டையை தகர்த்தெறிய வேண்டும்” என்று செயல்வீர்களிடையே பேசி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
அவர் பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை எனது சட்டை பையிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன ஒரு தலைவரிடம் (விஜயிடம்) நான் வந்துள்ளேன். என்னுடைய உடம்பில் ஓடும் ரத்தத்தையும் சிந்தி விஜயை கோட்டையில் அமர செய்யும்வரை நான் ஓயப்போவதில்லை.
நாய் பிடிப்பதற்கு ஒருவர் இருக்கிறார் என்று பேசினார்கள். நாய் நன்றியுள்ள பிராணி என்பதை மறந்துவிடாதீர்கள். அதே இயக்கத்தில் இருந்துகொண்டு இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள் நம்மைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களுக்கு அந்த தகுதி உள்ளதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் திமுகவில் இணைந்தது வேதனைக்குரியது. யார் வேண்டுமாலும் எந்த இயக்கத்திலும் சேரலாம். ஆனால் ஜெயலலிதா மீது வழக்கு போட்டவர்கள் திமுகவினர். இதை ஓ. பன்னீர்செல்வம் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும்” என்றார்.

