திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் சார்பில் பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.
சுப்பிரமணியசுவாமி கோவில்
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் ஆனி சஷ்டி விரத நாளில் பால்குடம், காவடி எடுத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் 43-வது ஆண்டை முன்னிட்டு இன்று விரதமிருந்த பக்தர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தினர். மேலும் சிலர் 16 அடி நீளம் உள்ள வேல் குத்தி இருந்தனர். அவர்கள் அனைவரும் மேளதாளம் முழங்க எட்டு வீதிகளிலும் ஊர்வலமாக வந்து சன்னதி தெரு வழியாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. மாலை நேரத்தில் பக்தர்கள் கோவில் கடற்கரையில் பூக்குழி இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் பொது திரிசுதந்திரர்கள் சபையினரால் செய்யப்பட்டது.

