டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 50வது பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அவர் பேசியதாவது:
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387ல் இருந்து 819ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் இளங்கலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 51,000-ல் இருந்து 1.29 லட்சமாகவும், முதுகலை இடங்களின் எண்ணிக்கை 31,000 -ல் இருந்து 78,000 ஆகவும் உயர்ந்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
SRS தரவுகளின்படி பிரசவத்தின்போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை விகிதம் (MMR) 130-ல் இருந்து 88 ஆகவும், குழந்தை இறப்பு விகிதம் (IMR) 39-ல் இருந்து 27 ஆகவும் குறைந்துள்ளது.
தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தில் நாடு கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR) மற்றும் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் (NMR) ஆகியவை முறையே 42 சதவீதம் மற்றும் 39 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.
இந்தியாவில் காசநோய் பாதிப்பு 17.7 சதவீதம் குறைந்துள்ளது.
இது உலக சராசரியான 8.3 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்று தி லான்செட் அறிக்கை தெரிவித்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

