த.வெ.க தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜய் இதுவரை கரூரை நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை.
இதற்கு காரணம், அங்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு கோரியுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து “விஜய் கரூருக்கு போனால், அவர் உயிருக்கு யார் உத்தரவாதம்? 41 பேரை அடித்தும் மிதித்தும் கொன்றதுபோல் விஜயையும் செய்துவிடலாம்.
அதனால்தான் அவர் பாதுகாப்பு கேட்டு அனுமதி கோரியுள்ளார்.
மேலும், விஜய் கரூருக்கு சென்றால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்படும் அப்போது அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? எனவும் கேள்விகளை எழுப்பினார்.
அது மட்டுமின்றி , த.வெ.க. தொண்டர்களின் ஆர்வத்தால் அதிமுக பிரச்சார கூட்டங்களில் த.வெ.க. கொடிகள் பறக்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அணியில் திரளப் போகிறார்கள் என்று அவர் உறுதியளித்தார்.
த.வெ.க. கொடி பாஜக கூட்டத்தில் எப்போது பறக்கும் என்ற கேள்விக்கு, “தற்போது அதற்கு பதிலளிக்க இயலாது” என்று அவர் பதிலளித்தார்.
இது, பாஜக-த.வெ.க. இடையேயான சாத்தியமான கூட்டணி குறித்த ஊகங்களை மேலும் தூண்டியுள்ளது.
அதிமுகவின் பிரச்சார கூட்டங்களில் த.வெ.க. தொண்டர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொண்டர்களிடம் பேசினார்.
திமுகவினர் கூட்டணிகளை மட்டுமே நம்புவதாக விமர்சித்த அவர், கூட்டணி முக்கியம் தான். ஆனால் கூட்டணி மட்டுமே வெற்றியைத் தரும் என்று நினைக்கக்கூடாது.
அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கும் என்று கூறினார்.

