தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புறக்கணித்ததால் டீ செலவு மிச்சம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டின்போது ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது மரபு.
தமிழ் புத்தாண்டு அன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு தீர்மானம், ஏழு தமிழர் விடுதலை தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்றாத ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சிகள் அறிவித்தனர். அதேபோல் கூட்டணியில் அல்லாத பாமகவும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்தது.
இந்த நிலையில் நேற்று காலை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு, ஆளூநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தலைமையில் தேநீர் விருந்து நடைபெற்றது.
இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை கலந்துகொண்டன. ஏற்கனவே அறிவித்தபடி தமிழக அரசு தரப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. அதேபோல் புறக்கணிப்பதாக அறிவித்த கூட்டணி கட்சியினரும் இதில் கலந்துகொள்ளாததால் தேநீர் விருந்து பொலிவிழந்து காணப்பட்டது.
தமிழக அரசு ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதிலயளித்த திரு அண்ணாமலை அவர்கள், ‘ஆளுநர் என்பவர் கட்சிகளை கடந்து, தமிழ்நாடு மக்கள் மற்றும் இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருந்து வரும் மரபு. இதில் மற்ற கட்சிகள் கலந்துகொள்ளாததனால் டீ செலவு மிச்சம். இதனால் மக்களின் வரிப்பணம் தான் மிச்சமாகி இருக்கிறது.
இதே ஆளுநர் கடந்த முறை சட்டப்பேரவை கூடியபோது திமுக எழுதிக் கொடுத்ததை மாண்பு கருதி கிளிப்பிள்ளைபோல வாசித்தார். அதில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது இருந்த மாண்பு இப்போது இல்லையா? எத்தனை காலத்திற்கு தான் தமிழக மக்களின் காதில் திமுகவினர் பூ சுத்துவார்கள்? இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் வந்திருக்க வேண்டும்’ என்று திரு அண்ணாமலை அவர்கள் கூறினார்.