19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த துறவி யாரென்று கேட்டால், அதற்கு ஒரே விடை சுவாமி விவேகானந்தர் தான் என கூறலாம். 1863 ஆம் ஆண்டு கொல்கத்தா நகரில் பிறந்த விவேகானந்தர்,சிறு வயது முதலே பிரம்மச்சர்ய பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்த காரணத்தினால் நிறைய அற்புத ஆற்றல்களை பெற்றவராக திகழ்ந்தார். அவற்றுள் ஒன்று தான் அவருடைய அபாரமான நினைவாற்றல். அவரது நினைவாற்றலின் மேன்மையை உலகறிய செய்த ஒரு அற்புத நிகழ்வை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
சுவாமி விவேகானந்தர் உலக சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வில் உள்ள சிகாகோ நகருக்குச்சென்றிருந்தார். விவேகானந்தருக்கு சிறுவயது முதலே நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சிகாகோ நகரை வந்தடைந்த விவேகானந்தர் அங்குள்ள ஒரு பெரிய நூலகத்திற்குச்சென்று அங்கு காணப்பட்ட மிகப்பெரிய புத்தகங்களை கட்டு கட்டாக எடுத்து சென்றார். இவ்வளவு பெரிய புத்தகங்களை எடுத்து செல்கிறார். இவற்றை எல்லாம் படித்து முடிக்க குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார் அந்த நூலகத்தின் மேற்பார்வையாளராக இருந்த பெண். மறுநாளே அவரது மனக்கணக்கு தப்பாகி விட்டது. ஆம்!! புத்தகங்களை எடுத்துச்சென்ற விவேகானந்தர் அவற்றை மறுநாளே கொண்டு வந்து நூலகத்தில் திருப்பி ஒப்படைத்துவிட்டார். மறுபடியும், புத்தகங்களை தேடி எடுத்து அவற்றையும் எடுத்துச்சென்றார். அந்த புத்தகங்களை மறுநாளே கொண்டு வந்து ஒப்படைத்து விட்டார். இப்படியே சில நாட்கள் செய்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த அந்த மேற்பார்வையாளர் “உங்களுக்கு இந்த புத்தகங்களை வாசிக்க விருப்பமில்லை என்றால் எதற்காக தினமும் இவற்றை எல்லாம் கஷ்டப்பட்டு சுமந்து சென்று திரும்ப கொண்டு வந்து தருகிறீர்கள் ?” என்று சற்று கோபத்துடன் கேட்டார்.
“நான் இந்த புத்தகங்களை எல்லாம் படித்து முடித்து விட்டேன். அதனால் இவற்றை திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கிறேன்.” என்று பதிலளித்தார் விவேகானந்தர். ஏற்கனவே எரிச்சலில் இருந்த அந்த பெண், இந்த பதிலை கேட்டதும் எரிமலையாகவே மாறிவிட்டார்.
“பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு.இவ்வளவு பெரிய புத்தகங்களை ஒரே நாளில் நீங்கள் படித்து முடித்துவிட்டீர்கள் என்பதை என்னால் நம்ப முடியாது. நீங்கள் என்ன அவ்வளவு பெரிய புத்திசாலியா?” என்று கிண்டலும் கோபமும் கலந்த தொனியில் விவேகானந்தரை பார்த்து கேட்டார். சுவாமி விவேகானந்தர் அமைதியாக நின்று கொண்டு ஒரு சிறு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார். விவேகானந்தரின் மௌனம் அந்த பெண்ணை மேலும் எரிச்சலடைய வைத்தது. அவரை எப்படியாவது வாதத்தில் வென்று விட வேண்டும் என்று முடிவெடுத்த அந்த பெண், “சரி…நீங்கள் திரும்ப கொண்டு வந்து தந்த இந்த புத்தகங்களில் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதில் ஒரு பக்கத்தை தேர்வு செய்து..அதிலிருந்து சில கேள்விகள் கேட்பேன். உங்களால் விடையளிக்க முடிகிறதா என்று பார்க்கலாம் “, என்று கூறினார்.
விவேகானந்தர் இப்பொழுதும் புன்னகைத்தபடியே நின்று கொண்டிருந்தார். கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து, அதில் இருந்த பக்க எண்ணை மட்டும் கூறினார் அந்த பெண்.

என்ன ஒரு ஆச்சர்யம் ?! மடை திறந்த வெள்ளம் போல அந்த பக்கத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த வாக்கியங்களை ஒரு வார்த்தை விடாமல் அப்படியே ஒப்பித்தார் விவேகானந்தர். மற்ற பக்கங்களை புரட்டினார் அந்த பெண். அவற்றிலிருந்து கேள்விக்கு மேல் கேள்விகளாக கேட்டார். சற்றும் யோசிக்காமல் நொடிப்பொழுதில் அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தார் சுவாமி விவேகானந்தர்.

அவரின் அபார நினைவாற்றலை கண்டு வாயடைத்து நின்றார் அந்த பெண். அதே புன்னகையுடன், அமைதியாக அங்கிருந்து நடந்து சென்று, படிப்பதற்காக மறுபடியும் புத்தகங்களை தேடி எடுக்க துவங்கினார் சுவாமி விவேகானந்தர். சிறு வயதிலிருந்தே கடினமான பிரம்மச்சர்ய பயிற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் விவேகானந்தருக்கு கிடைத்த பரிசு தான் இந்த அபாரமான நினைவாற்றல். ப்ரம்மச்சர்யத்தின் அற்புதங்களைப்பற்றி பின் வரும் நாட்களில் மேலும் அறிந்துகொள்வோம்…
