டிஜிபி நியமனம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த மனுவில் யுபிஎஸ்சி பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநரை நியமிக்க தவறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக டிஜிபி ஆக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவருக்கு பிறகு முழு நேர டிஜிபி ஆக யாரும் தேர்வு செய்யப்படாததால் சட்டம் ஒழுங்கு பிரிவு பொறுப்பு டிஜிபி-யாகவும் மாநில காவல் படைத்தலைவராகவும் டிஜிபி நிலையிலான ஐபிஎஸ் உயர் அதிகாரி ஜி.வெங்கட்ராமனை தமிழக அரசு ஆகஸ்ட் 31ம் தேதி தற்காலிகமாக நியமித்தது.
யுபிஎஸ்சி-க்கு மாநில அரசு பரிந்துரைத்த பட்டியலில் வெங்கட்ராமனின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஆனால் அவரை விட மூத்த அதிகாரிகள் பட்டியலில் இருப்பதால் அவர் நீங்கலாக வேறு சிலரது பெயர்களை அண்மையில் யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
அந்தப் பட்டியலுடன் மாநில அரசு உடன்படாததால் இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
மாநில அரசு அனுப்பி வைக்கும் ஐபிஎஸ் உயரதிகாரிகளின் தகுதிப்பட்டியலில் இருந்து முதல் மூன்று அதிகாரிகளின் பெயர்கள் யுபிஎஸ்சி தலைவர் தலைமையிலான உயர்நிலைக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
அதனடிப்படியில் மூன்று அதிகாரிகளில் இருந்து ஒருவரை மாநில அரசு முதல்வரின் ஒப்புதலைப் பெற்று நியமித்து அந்த அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்படும்.

