ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. இதன் காரணமாக இலங்கை அணி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
அதேசமயம் இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தங்களின் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இதன் காரணமாக தற்சமயம் குரூப் 2-ல் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி முன்னேறுவது குறித்து கடும் போட்டி நிலவி வருகிறது. ஏனெனில் ஏற்கெனவே இந்த குரூப்பில் இருந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதனால் தற்சமயம் மீதமுள்ள ஒரு இடத்திற்காக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியில் உள்ளனர். இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணிக்கே அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் நியூசிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு முடிவில்லை என 3 புள்ளிகளை பெற்றுள்ளது.
அதேசமயம் பாகிஸ்தான் அணி ஒரு தோல்வி ஒரு முடிவில்லை என்ற கணக்கில் ஒரு புள்ளியை மட்டுமே எடுத்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து அணியானது, இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும். மேற்கொண்டு பாகிஸ்தான் அணியும் தொடரிலிருந்து வெளியேற்றப்படும். ஒருவேளை இங்கிலாந்துடன் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவும் பட்சத்தில் அது பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பை உருவாக்கும்.
அப்படி நடக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் அணியானது இலங்கை அணிக்கு எதிராக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் 200 ரன்கள் என்ற இலக்கை 15 ஓவர்களுக்குள் எட்டினால், பாகிஸ்தானின் ரன் ரேட் நியூசிலாந்தை விட அதிகரிப்பதுடன், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் பெறும்.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் தற்சமயம் இங்கிலாந்தின் வெற்றிக்காக காத்திருக்கின்றனர். அதற்கேற்ப, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று ஆட்டம் கொழும்புவிலுள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

