இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அற்றொரு தொடக்க வீரரான டிம் செஃபர்டும் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா நிதனமாக விளையாடி 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மேற்கொண்டு அணியின் நட்சத்திர வீரர்கள் கிளென் பிலீப்ஸ் 18 ரன்களிலும், டேரில் மிட்செல் 3 ரன்களிலும், மார்க் சாப்மேன் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இறுதியில் கேப்டன் மிட்செல் சான்ட்னர் மற்றும் கோல் மெக்கன்ஸி இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சான்ட்னர் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 47 ரன்களையும், கோல் மெக்கன்ஸி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 31 ரன்களையும் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் துஷ்மந்தா சமீரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இன்னிங்ஸின் முதல் பந்தில் பதும் நிஷங்கா ஆட்டமிழக்க, அடுத்து வந்த சரித் அசலங்கா 5 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு குசால் மெண்டிஸ் 11 ரன்களுக்கும், பவன் ரத்நாயகே 10 ரன்களுக்கும், கேப்டன் தசுன் ஷனகா மற்றும் துஷன் ஹெமந்தா ஆகியோர் தலா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 31 ரன்களையும், துனிஷ் வெல்லாலகே 29 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அதேசமயம் தோல்வி காரணமாக இலங்கை அணியின் அரையிறுதி சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய ரச்சின் ரவீந்திரா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

