பெண்ணை ஆற்று நீரை பகிர்ந்துக் கொள்வதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சனைக்கு சமூக தீர்வு காண, இன்னும் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்தியாவின் ஜீவநதிகளில் ஒன்றான பெண்ணை ஆறு கர்நாடகாவில் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா என இரண்டு மாநிலங்கள் வழியாக பாயும் இந்த நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கர்நாடக மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
குறிப்பாக கோலார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நீரேற்ற நிலையங்களுக்கு தேவையான தண்ணீர் பெண்ணை ஆற்றில் இருந்து நேரடியாக எடுக்கும் முயற்சியில் கர்நாடகம் இறங்கியுள்ளது. மேலும், இதன் கிளை நதியான மார்கண்டேய நந்தி நதியின் குறுக்கே யார்கோல் கிராமத்துக்கு அருகே அணையை கட்டும் பணியையும் கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் இந்த ஆறு பாயும் மாவட்டங்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது மேற்கொண்டு பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், தீர்ப்பாயத்தை அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2019 நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 2 -ம் தேதிகளில் தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.
‘மாநிலங்ளுக்கு இடையேயான நதி நீர் பங்கீட்டு பிரச்னைகள் குறித்த 1956 -ம் ஆண்டு சட்ட பிரிவுகளின் கீழ் தான் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவிமடுக்கவில்லை. எனவே, பெண்ணை ஆறு பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில், தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை இந்த நதியின் நீர்ப்பிடிப்புக்கு பகுதிகளில் கர்நாடக மாநில அரசு மேற்கொண்டு வரும் பணிகளில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. மேலும், இந்த பிரச்சனைக்கு சுமூக தீ்ர்வு காணும் வரை பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் புதிய திட்டங்கள் எதையும் தொடங்க கர்நாடக மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டின் இந்த குற்றச்சாட்டை மறுத்த கர்நாடக மாநில அரசு, பெண்ணை ஆற்றின் 11.77 டிஎம்சி தண்ணீரில் 9.77 டிஎம்சி நீரை சொந்த பயன்பாட்டுக்கும், மீதிமுள்ள 2 டிஎம்சி தண்ணீர் மற்றும் உபரி நீர் தமிழ்நாட்டுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இது போதுமானது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பிவ் கடந்த ஆண்டு ஜனவரியில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இரு மாநிலங்களின் அமைச்சர்கள் நிலையான ஆலோசனைக் கூட்டத்துக்கு முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது. மார்ச் 2025 இல் மீண்டும் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த அழைப்பை தமிழக அரசு ஏற்கவில்லை. தீர்ப்பாயம் அமைப்பது ஒன்றுதான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று வலியுறுத்தியது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிவையில், தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிடுவது ஒன்றே இப்பிரச்சனைக்கு தீர்வு காண வழி என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி. வில்சன் மற்றும் வி.கிருஷ்ணமூர்த்தி வாதிட்டனர்.
ஆனால் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு சமூக தீர்வு காண மீண்டுமொரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் அப்போது கோரினார்.
இறுதியாக இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்ணை ஆறு விவகாரத்தில் தீர்வு காணும் வகையில், இரு மாநிலங்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று மத்திய அரசு தரப்பில் கெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19-ம் தேதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘பெண்ணை ஆறு விவகாரத்தில் சமூக தீர்வு காண மத்திய அரசு இன்னும் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

