திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சொகுசுக் காரில் துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ‘மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ நடைபெறுவது வழக்கம். அப்போது, பொதுமக்கள் நிலம், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை வழங்குவர். அந்த வகையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
அதற்காக, மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதற்காக, வழக்கத்தை விட அதிகமான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருவதால், நுழைவு வாயிலில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பிறகே போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
அப்போது, கருப்பு நிற சொகுசுக் காரில் வந்த திருப்பூர் மாவட்டம் மூலனூர் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில், ஏர் கன் 0.22 ரக துப்பாக்கி ஒன்று காருக்கு இருந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த உதவி காவல் ஆணையர் ஜான் தலைமையில் போலீசார், காரின் உரிமையாளரான ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த ஏர் கன் 0.22 ரக துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா என போலீசார் ஆணவங்களை சரிபார்த்த போது, அனைத்தும் சரியாக இருந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், புதியதாக மற்றொரு துப்பாக்கிக்கு உரிமம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தபோது தவறுதலாக இந்த துப்பாக்கியை கொண்டு வந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறக் கூடிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக இதனை அவர் கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இருந்தாலும், மக்கள் அதிகளவு கூடும் மக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் போலீசார் சோதனையில் துப்பாக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

