தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் கடந்த இரண்டு நாட்களாக ஆஜராகி, ஆணையத்தின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த ஓபிஎஸ், தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. பொதுமக்களுக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்த ஐயங்களை போக்கவே விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டுமென கோரியிருந்தேன் என தெரிவித்திருந்தார். மேலும், சசிகலா மீது தனக்கு எப்போதும் அபிமானமும், மரியாதையும் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் ஓபிஎஸ்.
இந்நிலையில், தன்னைப்பற்றிய ஓபிஎஸ்ன் கருத்து குறித்து பதிலளித்துள்ள சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உண்மையை பேசியிருக்கிறார். விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதால் தான் தற்போது ஜெயலலிதா மரணம் குறித்த உண்மை பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார்.