அணு சக்தி உற்பத்தில் இந்தியாவின் நம்பிக்கையான தோழனாக ரஷ்யா தொடர்ந்து இருந்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதல் நடவடிக்கையினால், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ளது. இதனால் அவ்வழியாக வரும் வணிக கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எரிபொருளுக்கான மூலப்பொருட்களைக் கொண்டு வரும் கப்பல்கள் நிறுத்தப்பட்டதால், பல்வேறு நாடுகளின் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை எரிபொருள் தேவையில் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே பெறப்படுகிறது. அதுவும் மேற்கு ஆசிய நாடுகளையே இந்தியா அதிகம் சார்ந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச அளவில் 20 சதவீத எரிபொருள் கொண்டுவரப்படும் நிலையில், ஈரான் மீதான தாக்குதல் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட்ஸ்
இதுபோன்ற போர் சூழல் இந்தியாவின் எரிபொருள் தேவையை பாதிக்கும் நிலையில், நேற்று (மார்ச் 23) பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து மக்களவையில் பேசிய அவர், 60 சதவீத எல்.ஜி.பி எரிவாயு மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், அதனால் இந்தியாவில் அதன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார். மேலும், இந்தியாவின் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று ‘இந்தியாவும் ரஷ்யாவும்: ஒரு புதிய இருதரப்பு செயல்திட்டத்தை நோக்கி’ என்ற தலைப்பில் மாஸ்கோவில் கூட்டம் நடைபெற்றது. இந்தியா – ரஷ்யா உறவைப் பற்றிய முக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொளி காட்சி வழியாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
முதன்மை பங்குதாரர் ரஷ்யா
அப்போது பேசிய அவர், “இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் அணு ஆற்றல் உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்ஸ் அளவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் அணுசக்தி உற்பத்திக்கு முதன்மை பங்குதாரராக ரஷ்யா விளங்கி வருகிறது. இந்தியா – ரஷ்யா ஒருங்கிணைப்பில், கூடங்குளம் அணுசக்தி நிலையத்தில் 6 உலைகள் அமைக்கப்பட்டது. 2 உலைகள் ஏற்கனவே இயக்கத்தில் உள்ள நிலையில், மீதமுள்ள உலைகளில் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கூடங்குளம் அணுசக்தி ஆலை செயல்படும் காலம் முழுவதும் அணு எரிபொருள் தடையின்றி வழங்கப்படும் என ரஷ்யா உத்தரவாதம் அளித்திருக்கிறது.
அமைக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் அணுசக்தி உற்பத்திக்கு ரஷ்யாவுடனான உறவைப் பலப்படுத்துவது மூலம், வேறு நாடுகளைச் சார்ந்து இருப்பதில் இருந்து நீண்ட கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும்” என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
இதனிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அரசு செயலாளர் மார்கோ ரூபியோவை தொடர்புகொண்டு பேசினார். அப்போது, மேற்காசியாவில் நிலவும் பதட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், இருநாடுகளும் இணைந்து இந்த சூழலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

