ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் ரூ.761 கோடிக்கும் மேல் வசூலித்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதியுள்ளது. வரலாறு காணாத வகையில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்து ‘ப்ளாக் பஸ்டர்’ படமாக உருவெடுத்துள்ள ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்திற்கு முன்பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதன் மூலம், இந்திய மற்றும் சர்வதேச அளவில் ஒரு இந்திய படத்திற்கான மிகப்பெரிய ‘ஓப்பனிங் வீக்கெண்ட் வசூல்’ என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது.
வசூல் வேட்டை
இந்தியில் வெளியான ‘துரந்தர்’ முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அதிக கட்டணத்தில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சிகள், அதிக வசூல் செய்த சனிக்கிழமை, அதன் தொடர்ச்சியாக அதிக வசூல் செய்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் உலகளவில் எந்தவொரு இந்திய படமும் எட்டாத மிகப்பெரிய வார இறுதி வசூல் என பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’
குறிப்பாக, முதல் வார இறுதியில் மட்டும் உலகளவில் ரூ.761 கோடி வசூலித்திருப்பதாக இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், உள்நாட்டில் மிக வேகமாக ரூபாய் 300 கோடி வசூலை எட்டிய திரைப்படம், முதல் சனிக்கிழமையில் அதிக டிக்கெட்டுகள் விற்பனையான திரைப்படம் போன்ற பெருமையை துரந்தர் இரண்டாம் பாகம் பெற்றிருக்கிறது.
புக் மை ஷோவில் (BookMyShow) ஒரு மணிநேரத்திற்கு 109.17 கோடி ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது இந்த திரைப்படத்திற்கு கிடைத்த இமாலய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

