இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்தி வீரர் ரிங்கு சிங். இவர் தற்சமயம் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழுந்தார்.
முன்னதாக அவர் கடந்த வாரம் உடல்நிலை மோசமான நிலையில் நொய்டாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தந்தையின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, ஜிம்பாப்வே போட்டிக்கு முன்னதாக ரிங்கு சிங் இந்திய அணியின் பயிற்சியை தவிர்த்து நெய்டா திரும்பி இருந்தார்.
இதனால் ரிங்கு சிங் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல்களும் வெளியாகின. இருப்பினும் அவர் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தார். ஆனாலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிங்கு சிங் இடம் பிடிக்கவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் ரிங்கு சிங்கின் தந்தை இறப்பு செய்தியானது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம், ரிங்கு சிங்கிற்கு ஆதரவாகவும் அவரது தந்தைக்காக உருக்கமான இரங்கல் செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
ஹர்பஜன் சிங் தனது பதிவில், “ரிங்கு சிங்கின் தந்தை திரு. கான்சந்திர சிங் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ரிங்கு சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இது மிகவும் கடினமான நேரமாகும். இருப்பினும் அவர் டி20 உலகக் கோப்பையின் போது தனது பொறுப்புகளில் உறுதியாக இருக்கிறார். ரிங்கு சிங்கிற்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமான ரிங்கு சிங் இதுவரையிலும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 3 அரைசதங்கள் உள்பட 665 ரன்களை சேர்த்துள்ளார். இதில் அவர் 55 பவுண்டரிகளையும், 38 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

