அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ‘திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்து விழும்; கவுண்டவுன் தொடங்கிவிட்டது’ என அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இதற்கு திமுகவும் எதிர்வினையாற்றியுள்ளது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வீதம் மொத்தம் ரூ.888 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யும் படி தமிழக காவல்துறையின் லஞ்ச தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள்:
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்:
“திமுக அமைச்சர் நேரு, அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரைவில் வழக்கு பதிந்து, உண்மை வெளிக்கொணரப்படும் என்னும் நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில், மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷனில் கொழுக்கும் திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான கவுண்டவுன் இன்று தொடங்கிவிட்டது.”
பாமக தலைவர் அன்புமணி:
“திமுகவின் ஊழல் கோட்டை இடிந்து தரைமட்டமாகும். அதனால் மக்கள் மத்தியில் ஏற்படும் அதிர்வுகளால் வரும் தேர்தலில் திமுக அடியோடு துடைத்து எறியப்படும்.”
பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை:
“அமைச்சர் நேருவின் ஒரு துறையில் மட்டுமே ரூ.2,300 கோடி ஊழல் என்றால் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் அத்தனை பேரும் செய்திருக்கின்ற ஊழல்களை கணக்கிட்டால் மக்களே உங்கள் பணம் எவ்வளவு சுரண்டப்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் பணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.”
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை:
“தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார். திமுக ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, சுமார் ரூ.2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது?”
தவெக தலைவர் விஜய்:
”கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1,020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஊழல் மலிந்த ஸ்டாலின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1,000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1,020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் திமுக அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்.”

