ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டிலேயே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 4 நாட்டுத் துப்பாக்கி மற்றும் 14 நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கம்பிக்கொல்லை பகுதியில் அனுமதியின்றி வீட்டில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர், அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சத்யநாதன் என்பவரது வீட்டில் சோதனை செய்த போது, அவரது வீட்டில் வனவிலங்குகளை வேட்டையாட, வீட்டிலேயே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 4 நாட்டுத் துப்பாக்கி மற்றும் 14 நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் வருவதையறிந்து தப்பியோடிய சத்யநாதனை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய சத்யநாதனை பிடித்த பிறகே பல்வேறு உண்மைகள் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் தயாரித்து பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

