திருச்சிக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,655 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, பஞ்சப்பூரில் இருந்து விமான நிலையம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் பிரதமரின் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பல லட்சம்பேர் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று (மார்ச் 11) மாலை 5 மணியளவில் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தருகிறார்.
அங்கிருந்து 5.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் அருகே எடமலைப்பட்டி புதூரில் அமைந்த ஹெலிபேடில் இறங்குகிறார்.
அங்கு நடைபெறும் அரசு விழாவில், சென்னை மணலியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் உயவு எண்ணெய் கலவை ஆலை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நகர எரிவாயு விநியோகத் திட்டங்கள், தமிழ்நாடு முழுவதும் 370.52 கி.மீ. நீளமுள்ள பாரத பிரதமரின் கிராமப்புறச் சாலைகள், கங்கைகொண்ட சோழபுரத்தில் புறவழிச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.5,655 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மேலும், ராமேசுவரம்- மங்களூரு விரைவு ரயில், நாகர்கோவில்- சார்லப்பள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில், போத்தனூர் (கோவை)- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில், திருநெல்வேலி- மங்களூரு சந்திப்பு விரைவு ரயில், மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் ஆகிய 5 ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
அதன்பிறகு, அதேபகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார்.

