டெல்லியில் இன்று தொடங்கி 20ஆம் தேதி வரை 5 நாட்கள் AI உச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் 45-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சமீப காலமாக பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) முக்கிய பங்காற்றி வருகிறது. உலகளவிலான தொழில்நுட்ப வளர்ச்சியில் AI-இன் அளப்பரிய பங்கை உணர்த்தும் வகையில், கடந்த 3 ஆண்டுகளாக AI உச்சி மாநாடானது வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4வது ஆண்டாக இந்த முறை AI உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது.
முதன்முறையாக தெற்கு நாடுகளில் ஒன்றாக இந்தியாவில் நடைபெறுகிற இந்த உச்சி மாநாட்டில் AI பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு, நெறிமுறை பயன்பாடு, தொழில்களில் AI எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது, விவசாயிகள், சிறு தொழில்களில் மற்றும் தனி நபர்களுக்கு AI எவ்வாறு உதவியாக இருக்கும் என்பது போன்ற 700க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம்பெறுகின்றன.
இந்த மாநாட்டிற்காக, 7000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் 10 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொடக்க நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. குறிப்பாக, ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, செர்பியா, எஸ்டோனியா, தஜிகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (பிப்ரவரி 16) முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப மற்றும் AI நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும், 45க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
குறிப்பாக, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, பிரான்ஸ், பிராசில், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளின் அதிபர்களும், அபுதாபியின் பட்டத்து இளவரசரும், மொரீஷியஸ் நாட்டின் பிரதமரும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இவர்கள் தவிர, பொலிவியா, குரோஷியா, பின்லாந்து, கிரீஸ், கஜகஸ்தான் மற்றும் செர்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

