ஆர்டிகிள் 15 என்ற ஹிந்தி படத்தின் தழுவலாக இன்று வெளியாகியிருக்கும் படம் ‘நெஞ்சுக்கு நீதி’. இது ஒரிஜினல் படத்திற்கு நியாயம் சேர்த்துள்ளதாக பலரும் பாராட்டி வருகிறார்கள்.
2012ம் ஆண்டு வெளியான பிஸ்சா படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். அதனைத்தொடர்த்து ஜிகர்தண்டா, டார்லிங், கனா, தெறி, காதலும் கடந்து போகும், கபாலி, மாஸ்டர் போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க பாடல்களை எழுதியிருந்தார். மேலும், ராஜா ராணி, மான்கராத்தே, ரெமோ போன்ற படங்களில் நடித்தும் உள்ளார்.
இந்நிலையில், 2018ம் ஆண்டு ‘கனா’ திரைப்படத்தின் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருப்பார். மகளிர் கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட இந்த படம் மக்களிடம் வரவேற்பை பெற்றது.
தனது முதல் படத்திலேயே நல்ல இயக்குனர் என்ற பெயரை பெற்ற அருண்ராஜா காமராஜ். அடுத்து அவர் இயக்கி இன்று வெளியாகியிருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. இதில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ராஜேந்திரன் மற்றும் ஆரி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியான ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் செய்து வெளியாகியிருக்கிறது.
ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் உதயநிதி. மேலும், அந்த ஊரில் உள்ள சாதி வேறுபாடுகளை மீறி எப்படி அந்த வழக்கை சட்டப்படி எதிர் கொள்கிறார் என்பது தான் கதை. சமூகத்தில் நடக்கும் சாதி அவலங்களை திரையில் பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.
திரைக்கதை பாடல்கள் இல்லாமல் நகர்வது படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. மற்றும் பின்னணி இசை படத்தின் பல காட்சிகளை மெருகேற்றுகிறது. மனிதன் படத்திற்கு பிறகு உதயநிதி தன்னை நடிகர் என்று சொல்வதற்கேற்ப நடித்திருக்கிறார். இருப்பினும் படத்தில் சூரியன் உதயமாகும் போது அவர் வருவது போன்ற காட்சிகள் எல்லாம் தேவை இல்லாததாகவே இருக்கிறது.