மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் காெடுமைகள் அதிகரித்து வருவதை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் எழுச்சியின் வடிவாக அமைந்தது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றினேன்.
இந்த விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றச்செயல்கள், காவல் நிலைய மரணங்கள் போன்ற மனிதாபிமானமற்ற நிகழ்வுகள் குறித்து வலுவான கண்டனத்தை பதிவு செய்தோம். மேலும், ஒருகாலத்தில் புனிதமான சமூக ஒற்றுமையால் பெயர் பெற்ற தமிழ்நாட்டை, தங்களின் சுயநல அரசியல் லாபத்திற்காக பிரிவினை அரசியலால் சிதைத்து, மக்களிடையே பிளவை விதைக்கும் இந்த நயவஞ்சக ஆட்சிக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தனர்.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து NDA தோழமைக் கட்சித் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இணைந்து பெரும் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக்கினர்.
தமிழகம் தழுவிய இந்த மகத்தான மக்கள் எழுச்சி, விரைவில் இந்த செயலற்ற திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்களின் தீர்ப்பின் மூலம் அவர்களை வீட்டிற்கு அனுப்பும் என்ற உறுதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் அஇஅதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் ராஜு, முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் அஇஅதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் அஇஅதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

