மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகப் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சாதம், பொரியல், கூட்டு, பாயாசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்த அன்னதானத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரும் மார்ச் 15- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயிலின் செயல் அலுவலர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தற்ோது சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத் திட்டத்தில் பக்தர்களின் விருப்பத்திற்கு இணங்கவும், திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் பயன்பெறும் வகையிலும் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், அப்பளம், பாயாசம் சுகாதாரமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின்படி, வெண்பொங்கல், சட்னி, சாம்பார் காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர். ஊறுகாய், அப்பளம், பாயாசம் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரையிலும் மற்றும் மாலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ரவா கிச்சடி, சட்னி, சாம்பார் ஆகியவை வரும் மார்ச் 15- ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அன்னதானத் திட்டத்தின் மாற்றத்தால் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதுடன், சிறப்பான தரிசனம் செய்து உணவருந்திவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்புவர் என்பது குறிப்பிடத்தக்கது.

