மதுரை மாநகராட்சி மேயராக இருந்துவந்த இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவிரன் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் வரிகள் நிர்ணயிப்பதில் நடைபெற்ற முறைகேடு காரணமாக பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
இதனைத்தொடர்ந்து, இன்று கூடிய அவசர சிறப்பு மாமன்ற கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், அதிமுக போராட்டத்தின் அடிப்படையில் இந்திராணி மேயர் பதவியை ராஜினாமா செய்தார் என எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
அதிமுகவின் இந்த கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக, திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மேயர் இந்திராணி ராஜினாமா தீர்மானம் முன்மொழியப்பட்டது. தீர்மானத்தை ஒருமனதாக ஏற்று மதுரை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனால் 10.30 மணிக்கு தொடங்கிய மாமன்ற கூட்டம் 10.35 மணி அளவில் வெறும் 5 நிமிடங்களில் நிறைவடைந்தது.
இதன் பிறகு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா அளித்த பேட்டியில், அதிமுக அழுத்தம் காரணமாக மண்டலத் தலைவர்கள் குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
மேயர் ராஜினாமா அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எடப்பாடி பழனிசாமி மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தார். புதிய மேயரை உடனே தேர்வு செய்ய வேண்டும்.
திமுக அரசின் கையாலாகாத தனத்தால் புதிய மேயரை இதுவரையில் தேர்வு செய்ய முடியவில்லை. மதுரையில் உள்ள 2 அமைச்சர்களின் ஈகோவால் புதிய மேயரை தேர்வு செய்ய முடியவில்லை என்று கூறினார்.
முன்னதாக மதுரை மேயராக இருந்துவந்த இந்திராணி பொன் வசந்தின் கணவரும் கடந்த சில வாரங்களுக்கும முன்பு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.