கோயில் தேர் ஊர்வலத்தில் தீண்டாமை கடைபிடிப்பதாக தொடர்ந்த வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த சத்யராஜ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள அருள்மிகு காடைப்பிள்ளை அய்யனார் கோயில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் நடைபெறும். இந்த கோயில் தேர் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் தெருக்களுக்குள் வருவதில்லை. பின்னிரவில் தெருவில் முனைப் பகுதியில் சிறிது நேரம் தேர் நிற்கும், அந்த நேரத்தில் தெருவில் வசிக்கும் குடும்பத்தினர், அங்கு சென்று தரிசனம் பெறுவார்கள்.
ஆகவே திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு காடைப்பிள்ளை அய்யனார் கோயிலின் தேர் குறிப்பிட்ட பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களிலும் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வதோடு, இதில் தீண்டாமையை கடைபிடிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள அருள்மிகு காடைப்பிள்ளை அய்யனார் கோயில் திருவிழா ஊர்வலத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோயிலின் துணை ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

