வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர் என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி) சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மாநில இளைஞரணி பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக் குழுவில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “இளைஞர்களை நம்பி தான் பாமக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அர்ப்பணிப்போடு நீங்கள் பணியாற்ற வேண்டும். நமது கட்சியில் நடைபெறும் குழப்பத்திற்கு ஆளும் திமுக தான் காரணம். தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பியுள்ளது.
தீய சக்தி திமுகவை பற்றி களத்தில் நமது இளைஞர்கள் மக்களிடம் வீதி வீதியாக, வீடு வீடாக சென்று சொல்லுங்கள். திமுக ஒற்றை இலக்க எண்ணிலேயே தேர்தலில் வெற்றி பெறும். திமுக மீது பெற்றோர்கள், பெண்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் முதலமைச்சரே காரணம்.
மருத்துவர் அய்யாவை சுற்றி சில துரோகிகள் உள்ளனர். சின்னம் தொடர்பாக, கட்சியின் அங்கீகாரம் தொடர்பாக பொய்யான தகவல்களை சொல்லி அய்யாவை குழப்பியுள்ளனர். இதில் முக்கியமான துரோகி ஜி.கே. மணி. இந்த கூட்டத்தில் ஜி.கே. மணியை பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. நமக்குள்ளே விமர்சனம் செய்து யாரும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
நமக்கு ஒரே எதிரி கொடுங்கோல் திமுக தான். திமுகவின் சூழ்ச்சியாலேயே நமக்குள் குழப்பம் ஏற்படுகிறது. திமுகவினர் இங்கேயும், அங்கேயும் கொளுத்தி போடுவதில் பிஎச்டி முடித்துள்ளனர். திமுக தேர்தல் களத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். இவ்வளவு மோசமான ஆட்சியை தமிழ்நாடு பார்த்தது இல்லை. 47 தொகுதிகளில் பணம் கொடுக்கவே அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காசை கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று திமுகவினர் நினைக்கின்றனர்” என தெரிவித்தார்.
மேலும், இந்த கூட்டத்தில், எல்லோருக்கும் தரமான, சமச்சீரான, கட்டணமில்லா, சுமையில்லா திறன்சார் கல்வி, அறிவுசார் கல்வி, தொழில் கல்வி கட்டாயமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய பாடுபடுவோம். ஒரு பைசா ஊழல் இல்லாத நேர்மையான, தூய்மையான ஆட்சி அமைக்க உறுதியேற்போம். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் பரப்புரை செய்வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

