தமிழ்நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் விஜய் குரல் கொடுக்கவில்லை என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்த பாஜகவை சேர்ந்த நடிகை கஸ்தூரி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திமுக ஆட்சி துவங்கி இந்த நான்கரை ஆண்டுகளில் போதை பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு என சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒருங்கு சீர்குலைவை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது.
கோயம்புத்தூர் போராட்டத்தில் நான் பங்கேற்கின்றேன். மக்கள் குரலாக ஒலிக்கின்றோம். திமுக அரசை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களை குடி நோயாளிகளாக மாற்றி விட்டனர். அரசே மதுவிற்கு அடிமையாகி, மது விற்பனையை வைத்து இயங்குகிறது. திமுக கட்சி கூட்டங்களுக்கு மக்கள் திரண்டால் ஆதரவு என்றால், புதிய கட்சிக்கு ஏராளமான கூட்டம் திரளுகின்றனர். அப்படி என்றால் ஆதரவு என்று அர்த்தமா?” என கேள்வி எழுப்பினார்.
மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேசியது குறித்து கேட்ட போது, “கமல் பேச்சு சரி என்று சொன்னால், அவர் பேசியது அவர்களுக்கும் புரியவில்லை. கமல் தியாக பிரம்மத்தை அவமானப்படுத்தி தான் பேசுகிறார். தெலுங்கு மக்களை தவறாக பேசினேன் என்று என் மீது வழக்கு போட்டனர். ஆனால் கமல்ஹாசனை பாராட்டுகின்றனர்” என குற்றம்சாட்டினார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “கட்சி என்ன சொல்கின்றதோ அதை செய்வோம்” என பதிலளித்தார்.
பராசக்தி படமே ஓடவில்லை, திமுக நாடகம் தமிழ்நாட்டில் அரங்கேறாது என நாஞ்சில் சம்பத் பேசியுள்ளது குறித்த கேள்விக்கு, “தவெக சினிமாவை மட்டுமே நம்பி இருக்கின்றதா? நாஞ்சில் சம்பத் ஒரு தமிழ் அறிஞர், அங்கிருந்து திமுகவை விமர்சிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஒரு படத்தை வைத்து தான் இந்த ஆட்சியை விமர்சிக்க வேண்டும் என இல்லை. நாஞ்சில் சம்பத் விமர்சனம் தரக்குறைவாக ரசிக்கும் வகையில் இல்லை.
தமிழ்நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காதவர் விஜய். தூய்மை பணியாளர், அங்கன்வாடி, திருப்பரங்குன்றம் என எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை. கேரளாவில் கிறிஸ்தவர் தாக்கப்பட்டதற்கு மட்டும் அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை, ஆதவ் அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை. அமைதியாக வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்து விட்டது. கங்கனா ரனாவத் படத்திற்கு வந்தது போலவே ஜனநாயகன் படத்திற்கும் பிரச்சனை வந்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றம் போனதால், மத்திய அரசின் கையில் எதுவும் இல்லை” என தெரிவித்தார்.

