தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு
தாமஸ் ஆல்வா எடிசன் ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். 1847-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் ஓஹியோ மாநில மிலன் நகரில் பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு தச்சர், தாய் ஆசிரியர்.
எடிசன் பள்ளிக் கூடத்தில் படித்தது மூன்றே மாதங்கள் தாம். அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போன ஆசிரியர் அவரைத் தொடர்ந்து வகுப்பில் அனுமதிக்க மறுத்துவிட்டார்.வீட்டில் தாயிடம் கற்றார் எடிசன். பத்து வயதிலேயே தம்முடைய சோதனைகள், கண்டுபிடிப்புகளுக்காக ஓர் ‘ஒர்க்ஷாப்’பை அமைத்துக் கொண்டவர் அவர்.
தமது சோதனைகளைத் தொடர பணம் தேவைப்பட்டது அவருக்கு. அதற்காக ரயிலில் செய்தித்தாள், இனிப்பு வகைகள் விற்றுக் காசு சேர்த்திருக்கிறார். கொஞ்ச நாள் தொலைபேசி ஊழியராக வேலை பார்த்தார்.
1861-ல் உள்நாட்டுப் போர் மூண்டபோது மக்கள் போர்ச் செய்திகளை அறிவதில் ஆர்வம் கொண்டனர். எடிசன் தாமே செய்தித்தாளை அச்சடித்து விற்றார்.தம்முடைய செய்தித்தாளுக்கு அவரே ரிப்போர்ட்டராகவும், அச்சுக்கோர்த்து செய்திகளை அச்சிடுபவராகவும், விற்பவராகவும் செயல்பட்டார். அச்சிடுவது, விற்பது எல்லாமே ரயிலில்தான்.
ஓடும் ரயிலில் ஏறிய போது ஏற்பட்ட விபத்தில் அவருடைய காது செவிடாய் போனது. ரயிலில் அவர் நடத்திக் கொண்டிருந்த சோதனைக் கூடம் தீப்பிடித்ததில் அவருடைய ரயில் வியாபாரம் தடைப்பட்டது.
ஸ்டேஷன் மாஸ்டரின் குழந்தையை ரயில் விபத்தி லிருந்து எடிசன் காப்பாற்றினார். அதற்குப் பிரதியாய் குழந்தையின் தந்தை அவருக்கு ‘தந்தி முறையை கற்பித்தார்.
தமக்குத் தேவையான தந்திக் கருவியை எடிசன் தாமே தயாரித்துக் கொண்டார். 1887 வரை அமிலங்களை ஊற்றித்தான் விளக்கெரித்துக் கொண்டிருந்தார்கள். எடிசன் வெப்பத்தை வெளிவிடுகிற மின் விளக்கைக் கண்டுபிடித்துப் பெரும் புகழ் பெற்றார்.
மின்சார விநியோக மையம் ஒன்றை நியூயார்க் நகரில் ஏற்படுத்தி நுகர்வோருக்கு மின்சாரத்தை விநியோகித்தார். கிராமபோன், நவீன தட்டச்சு இயந்திரம், டிக்டேட்டிங் மெஷின், டெலிபோன் ட்ரான்ஸ் மிட்டர் போன்றவை அவருடைய கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
நியூ ஜெர்சியில் தம்முடைய சொந்த ஆய்வுக் கூடத்தை அவர் நிறுவினார். அங்கிருந்து கொண்டுதான் கிரகாம் பெல்லின் தொலைபேசி அமைவை அவர் அபிவிருத்தி செய்தார்.
அவர் பங்குச் சந்தை டெலிகிராப் ஏஜன்சியில் வேலை பார்த்தபோது தந்தி பதிவு கருவி (Ticker System)யைத் தயாரித்தார். பங்குச் சந்தையின் தலைவர் அக்கருவியை 40,000 டாலர் விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.
அந்த நாளில் மிகப் பெரிய தொகை அது! திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையான காமிரா, புரொஜக்டர் கருவிகளை எடிசன் கண்டுபிடித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு அவர் ‘பேடன்ட்’ (காப்புரிமை)களைப் பெற்றிருந்தார்.
எடிசன் நிறுவியிருந்த ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி செய்வதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இருந்தன.அதில் குழுவாக பலரும் வேலை செய்தார்கள். முறையான ஓர் ஆய்வுக் கூடத்தை முதன் முதலாய் அமைத்தது அவர்தான்.
எடிசன் ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல, அவர் தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். பல தொழில் சார்ந்த நிறுவனங்களையும் ஏற்படுத்தினார். எடிசனின் முக்கிய கண்டுபிடிப்பு ‘வாக்குவம் ட்யூப்’. அது மின்னணு தொழிற்சாலைக்குப் பெரிதும் தேவைப்படுவது.
நியூஜெர்சியிலுள்ள வெஸ்ட் ஆரஞ்சு என்னுமிடத்தில் 1931-ஆம் ஆண்டு எடிசன் காலமானார். அவர் 1887-ல் நிறுவிய ஆய்வுக் கூடத்தை 1956 ல் தேசிய நினைவுச் சின்னமாய் அமெரிக்க அரசு அறிவித்தது.