தமிழர் தம் தாய் நிலத்தில் அவர்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதென்பது சகித்துக்கொள்ள முடியாத ஒன்று என குறிஞ்சான்குளம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் திரைப்பட இயக்குனரும், அரசியல் செயற்பாட்டாளருமான வ.கௌதமன்.
நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் தாலுகா குறிஞ்சான் குளம் என்ற ஊரில் பட்டியலின சமுதாயத்தினர் தங்களது பகுதியில் காந்தரியம்மன் கோவில் கட்டி வழிபட முயன்றபோது, அப்பகுதியிலுள்ள மற்றுமோர் தரப்பினரால் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பட்டியலின மக்களில் பலர் கொலையும் செய்யப்பட்டனர். மேலும், தங்களின் அதிகார வலிமையின் காரணமாக பட்டியலின மக்களை கோவில் கட்டி வழிபட விடாமல் தடுத்தும் வருகின்றனர் மற்றுமோர் தரப்பினர்.
இந்த விவகாரம் நீறு பூத்த நெருப்பாகவே உள்ள நிலையில், இந்த ஆண்டு காந்தாரியம்மன் கோவில் விவகாரத்தில் கொலையுண்டோருக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரக்கூடுமென செய்திகள் வெளியான நிலையில், அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது தமிழக காவல் துறை.
இந்நிலையில், காந்தாரியம்மன் கோவில் விவகாரத்தில் கொலையுண்டோருக்கு அஞ்சலி செலுத்த திரைப்பட இயக்குனரும், அரசியல் செயற்பாட்டாளருமான வ.கௌதமன், குறிஞ்சான் குளம் செல்ல முயன்ற நிலையில், ஊரடங்கு உத்தரவினை சுட்டிக்காட்டி கைது செய்யப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன், “தமிழர்களின் தாய் நிலத்தில் ஆதித்தமிழ் குடியான பறையர் சமூகத்தின் அடிப்படை உரிமையை கேட்பதனை கூட இந்த அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பது கசப்பான உண்மை. தமிழர் நிலத்தில் அவர்களின் வழிபாட்டு உரிமைக்காகவே நாங்கள் போராடக்கூடிய நிலையில் இருக்கிறோம் என்பது ஒருபோதும் சகித்துக்கொள்ள கூடியதில்லை. அரசு இந்த விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென” தெரிவித்துள்ளார்.