சஞ்சு சாம்சனால் இந்திய அணிக்காக நிறைய செய்ய முடியும் என்று நம்பியதன் காரணமாகவே, அவரை நான் தொடர்ந்து ஆதரித்து வந்தேன் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்திய அணியின் இந்த சாதனை வெற்றிக்கு பெரும் பங்கினை வகித்தவர் சஞ்சு சாம்சன். ஏனெனில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் அவர் மோசமான ஃபார்மில் இருந்ததன் காரணமாக, அணியின் பிளேயிங் லெவனிலும் வாய்ப்பை இழந்தார்.
ஒரு கட்டத்தில் அணியின் டாப் ஆர்டர் சொதப்பவே சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சஞ்சு சாம்சன், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இறுதி வரை களத்தில் இருந்து 97 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். அதன் பின் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி மற்றும் நியூசிலாந்துடனான இறுதிப் போட்டிகளில் தலா 89 ரன்களை சேர்த்து இந்திய அணி மகுடம் சூட மிக முக்கிய காரணமாகவும் அமைந்தார்.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “சஞ்சு சாம்சனால் இந்திய அணிக்காக நிறைய செய்ய முடியும் என்று நம்பினேன். அதன் காரணமாக அவரை நான் தொடர்ந்து ஆதரித்து வந்தேன். நியூசிலாந்து தொடரில் அவரால் சிறப்பாக செயல்படமுடியவில்லை. ஆனால் அது பரவாயில்லை, ஏனென்றால் எல்லோருக்கும் ஒரு மோசமான ஃபார்ம் இருக்கும். அதனால் அவருக்கு சற்று இடைவெளி தேவைப்பட்டது.
அதனால் நாங்கள் அவருக்கு இரண்டு ஆட்டங்களில் ஓய்வளித்தோம். பின்னர் மீண்டும் அவர் அணிக்கு திரும்பி வந்ததும், சிறப்பாக விளையாடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் நாங்கள் நீண்ட காலமாக அவரது திறமையைக் கண்டிருக்கிறோம். ஏனெனில் அவர் டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை அடித்துள்ளார். அதனால் அவரால் மீண்டும் அதனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்கேற்றவாரே அவரும் சிறப்பாக விளையாடியுள்ளார்” என்றார்.
தொடர்ந்து உலகக் கோப்பை வென்றது குறித்து பேசிய அவர், “இந்தப் பயணம் உலகக் கோப்பைக்காக மட்டுமல்ல. கடந்த ஒன்றரை வருடங்களாக, நாங்கள் உலகக் கோப்பைக்குத் தயாராகி வந்தோம். இந்த பயணத்தை தொடங்கியபோது, என் மனதில் ஒரே ஒரு விஷயம் மட்டுமே இருந்தது, உலகக் கோப்பையை வெல்ல சிறந்த வாய்ப்பை எவ்வாறு நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள முடியும், அதற்கு, உலகின் மிகவும் அச்சமற்ற அணியாக நாம் இருப்போமா என்பது தான்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்கு பின், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று, பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டது தான். அதில், இந்திய அணி துணிச்சலுடன் விளையாடிய விதம், ரன்கள் எடுத்த விதத்தின் மூலம் கடந்த ஒன்றரை வருடமாக நாங்கள் பேசியதை, கிரிக்கெட் களத்தில் எங்களால் செயல்படுத்த முடிந்தது என்பதைக் காட்டுகிறது” என்றார்.

