தமிழகம் வந்த ‘வந்தே மாதரம்’ சைக்ளோதான் குழுவிற்கு மெரினாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை (CISF) சார்பில், ‘பாதுகாப்பான கடற்கரை – வளமான இந்தியா’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் சைக்கிள் பயணம் கடந்த ஜனவரி 28ஆம் தேதியன்று டெல்லி தொடங்கியது. வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தொடங்கி வைத்த இந்த சைக்ளோதான் நாடு முழுவதும் 6,553 கி.மீ நடைபெறுகிறது.
சுமார் 25 நாட்கள் நடக்கும் இந்த பயணத்தில், 65 பெண் வீராங்கனைகள் உட்பட 130 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் பக்காலி பகுதியிலிருந்து தொடங்கிய இந்த பயணம், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச கடலோர மாவட்டங்கள் வழியாக தற்போது, தமிழ்நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் பல கடலோர கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொதுமக்கள், மீனவர்கள், பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், மாணவர்கள், NCC கேடட்கள் மற்றும் இளைஞர்களுடன் நேரடி கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளது.
இந்த பயணத்தில், கடலோர பாதுகாப்பு, நீல பொருளாதாரம், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவ கிராமங்களில் தங்கிய CISF வீரர்கள், கடற்கரைப் பாதுகாப்பில் மீனவர்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
சென்னை வந்தடைந்த சிஐஎஸ்எஃப் குழுவிற்கு மெரினா கடற்கரையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை டைரக்டர் ஜெனரல் பிரவீர் ரஞ்சன், பத்மா பூஷண் நல்லி குப்புசாமி, நடிகை கீர்த்தி சுரேஷ், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

