தமிழ்நாட்டில் வட மாநில மாணவிகளுக்கு படிக்க இடம் கிடைத்தால், அவர்களின் பெற்றோர் நிம்மதியாக இருப்பார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலங்கள் உதயமான தின விழா சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் (ஆளுநர் மாளிகை) நடைபெற்றது. ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாட்டில் வசிக்கும் மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தைச் சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “நம் நாட்டு மக்களிடையே பல வேற்றுமைகள் இருக்கின்றன. மதம், இனம், மொழி, நிறம் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அந்த வேற்றுமைதான் நம் பாரதத்தின் அழகு. அதுதான் நம்மை உலக அளவில் தனித்துவமாக காட்டுகிறது.
சுதந்திரத்துக்கு பின்னர், நம் பாரதத்தில் பல மாநிலங்கள் உருவாகின. தற்போது 28 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் இருக்கும் நிலையில், நாளை இது மேலும் அதிகரிக்கலாம். மக்களின் நலனுக்காகவும் நிர்வாகத் தேவைகளுக்காகவும் புதிய மாநிலங்கள் உருவாகின்றன. ஆனால், எத்தனை மாநிலங்கள் உருவானாலும், ‘இந்தியர்கள்’ என்ற ஒரே குடையின் கீழ் நாம் ஒற்றுமையாக இருப்போம்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இது மிகவும் அழகான மாநிலம். கலாச்சாரம், பண்பாடு, முற்போக்கு சிந்தனை, வளர்ச்சி என அனைத்திலும் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக இருக்கிறது.
தமிழ் மக்கள் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தை இன்று வரையிலும் எந்த ஒரு மாற்றமும் இன்றி பின்பற்றி வருகின்றனர். பழமையான கல்வி நிலையங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
அருணாச்சல பிரதேசம், மிசோரம் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டை தங்களது சொந்த வீடு போல் நினைத்துக் கொள்வார்கள். ஏனெனில், தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பு அந்த அளவுக்கு இருக்கும். தமிழர்கள் இயற்கையாகவே மிகுந்த விருந்தோம்பல் குணமுடையவர்கள். அன்பானவர்கள்.
இன்னும் சொல்லப்போனால், வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு தமிழ்நாட்டில் படிக்க இடம் கிடைத்தால் அவர்களின் பெற்றோர்கள் நிம்மதியாக இருப்பார்கள். ஆனால், இந்த நிம்மதி டெல்லி அல்லது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருக்காது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் பயிலும் மாணவர்களை, அவர்களது பெற்றோர் இரவில் வெளியில் செல்ல அனுமதிப்பது கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் பயிலும் பிற மாநில மாணவர்களின் பெற்றோர், அவர்களை சுதந்திரமாக இரவில் வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
தமிழ்நாட்டில் படிக்கும் பிற மாநில மாணவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்கிறேன். உங்களுக்கு வீட்டு ஞாபகம் வந்தால், கவலைப்படாதீர்கள். இங்குதான் மக்கள் மாளிகை (ஆளுநர் மாளிகை) உள்ளது. எப்போதும் நான் இங்கு இருப்பேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து என்னை சந்தித்து தேநீர் அருந்தலாம்” என ஆளுநர் ரவி கூறினார்.

