ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து – கனடா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கனடா 4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க வீரரும் இடது கை பேட்ஸ்மேனுமான யுவராஜ் சம்ரா 65 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் விளாசினார்.
டி20 உலகக் கோப்பையிலும், சர்வதேச டி20 அரங்கிலும் யுவராஜ் சம்ராவின் முதல் சதமாக இது அமைந்தது. ஜேம்ஸ் நீஷாம் வீசிய 6-வது ஓவரில் யுவராஜ் சம்ரா தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசி மிரளச் செய்தார். இந்த 4 ஷாட்களையும் அவர் வெவ்வேறு திசைகளில் அடித்து கவனம் ஈர்த்தார். முதல் விக்கெட்டுக்கு யுவராஜ் சம்ரா, தில்பிரீத் பஜ்வா ஜோடி 14 ஓவர்களில் 116 ரன்கள் விளாசியிருந்தது.
கேப்டன் தில்பிரீத் பஜ்வா 36, நவ்னீத் தலிவால் 10, நிக்கோலஸ் கிர்டன் 2, ஹர்ஷ் தாகர் 3, திலான் ஹெய்லிகர் 8 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி தரப் பில் மேட்ஹென்றி, ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன், ஜேம்ஸ் நீஷாம் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் அதிரடி தொடக்கம் கொடுத்தார். மட்டையை சுழற்றிய ஃபின் ஆலன் 8 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் திலான் ஹெய்லிகர் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டிம் ஷெய்பர்ட்ட 6 ரன்களில் சாத் பின் ஜாபர் பந்தில் வெளியேறினார்.
30 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து கனடா அணியின் பந்வீச்சை வெளுத்து வாங்கினார். தனது 12-வது அரை சதத்தை கடந்த கிளென் பிலிப்ஸ் 36 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களும், 4-வது அரை சதத்தை கடந்த ரச்சின் ரவீந்திரா 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் விளாச நியூஸிலாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
3-வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா ஜோடி 12 ஓவர்களில் 146 ரன்களை குவித்தது. 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி லீக் சுற்றில் தனது பிரிவில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றில் நுழைந்திருந்தது.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் கனடா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் 22 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை கிளென் பிலிப்ஸ் படைத்தார்.
இதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிராக ஆரோன் ரெட்மான்ட் 23 பந்துகளிலும், கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் டிம் ஷெய்பர்ட் 23 பந்துகளிலும் அரை சதம் அடித்திருந்தனர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கனடாவின் யுவராஜ் சம்ரா 58 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த யுவராஜ் சம்ரா.
அவருக்கு 19 வயதாகிறது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் அகமது ஷெஹ்சாத் தனது 22 வயதில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் யுவராஜ் சம்ரா.

