அதிமுக-வின் செயல்பாடுகளை திமுக கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கி இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு அல்வா கொடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமது கண்டனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் திமுக சார்பில் அளிக்கப்பட்ட 525 வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை என்ற உண்மையை மக்களுக்கு சொல்லி வருவதாக கூறியுள்ள ஈபிஎஸ், கவர்ச்சிகரமான பல பெயர்களை வைத்து மக்களை ஏமாற்றும் இந்த அரசின் செயலை விளக்கும் வகையில், கடந்தாண்டு திமுகவின் உருட்டுக்கடை அல்வா ஒன்றை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாக பேசியோ தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்லத் திட்டங்களையும் கொண்டுவர திறனற்ற அரசு, மத்திய அரசு கேட்டதை தரவில்லை என வாய்ஜாலம் காட்டிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
திமுகவின் 2.0 ஆட்சியில் தமிழ்நாடு சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் முதலமைச்சர் காகிதப் பூ சுற்றுவதாகவும் விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை தெரிவித்து வாக்கு கேட்க தயாரா? என வினவியுள்ளார்.
