வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு நள்ளிரவில் திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. தலைநகர் தில்லியில் ரூ.835-க்கு விற்கப்பட்டு வந்த எரிவாயு சிலிண்டர் விலை ரூ.913-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, ஓட்டல் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் சிலிண்டரின் விலை ரூ.1,883 ஆக உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த வகை சிலிண்டரின் விலை ரூ.28 அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.114.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் வணிக சிலிண்டரின் விலை ரூ.302.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறப்பட்ட நிலையில், மத்திய அரசு திடீரென நள்ளிரவில் விலையை உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. நாளை மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தற்போது சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

