கரூரில் 40 பேர் பலியான .நடிகர் விஜய்யின் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு கலெக்டர், போலீஸ் எஸ்பி இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
நடிகர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது;
40 அப்பாவி உயிர்களை பறி கொடுத்துள்ளோம். 56க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கரூர் மாநகரம், மாவட்டம் முழுவதும் அழுகுரல் மட்டுமே கேட்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்கின்ற அளவுக்கு இந்த நிகழ்வு பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒரு வாரம் கழித்து 40 பேரின் இல்லங்களுக்குச் சென்று ஆறுதல் சொல்ல, காசோலை வழங்க இருக்கின்றோம்.
கரூர் சம்பவத்தில் பல தவறுகள், குளறுபடிகள் நடந்திருக்கிறது. பொதுமக்கள் கூடும் போது சரியான இடத்தை கொடுக்கிறோமா? கூட்டத்தை கட்டுப்படுத்துகிறோமா என்றால் இல்லை.
கள்ளக்குறிச்சியில் 64 பேரின் மரணத்தை தாண்டி, கடந்தாண்டு சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலி என வரிசையாக கூட்டத்தை கட்டுப்படுத்தி, சமாளிப்பதில் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்து கொண்டே இருக்கிறது.
எனவே எங்களின் முதல் குற்றச்சாட்டு மாநில அரசின் மீதுதான். காரணம் சரியான இடத்தில் அனுமதி கொடுப்பது. சரியான இடம் என்றால் அனுமதியே தராதீர்கள். இல்லை என்று சொல்லுங்கள், அப்படி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுங்கள்.
வேலுச்சாமிபுரம் ஒரு சின்ன சந்தை. அங்கு கூட்டம் நடத்த வாய்ப்பே கிடையாது. எதற்கு அதை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தவெகவுக்கு கொடுத்த அனுமதி கடிதத்தை நான் பார்த்தேன். அவர்கள் கேட்டது லைட் அவுஸ் ரவுண்டானா, உழவர் சந்தை பக்கம் கேட்டு இருக்கின்றனர்.
மாவட்ட கலெக்டர், எஸ்பி இவர்கள் இடத்தை சரியாக தேர்வு செய்யவில்லை. இது முதல் தவறு. 500 பேர் பந்தோபஸ்தில் இருந்தனர் என்று பொறுப்பு DGP கூறுகிறார். 500 பேர் எல்லாம் இல்லை. வண்டிக்குள் இருந்தவர்கள், அதி விரைவு படையினர் என இவர்களை எல்லாம் சேர்த்துத்தான் 500 பேர். தமிழக போலீஸ் 500 பேர் இல்லை. கீழே இருந்த போலீஸ்காரர்கள் எத்தனை பேர்? 100 பேர் கூட இல்லை. அந்த கணக்கு எழுதி 500 என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கூட்டம் வரும் என்று தெரியும், எண்ணிக்கையை விடுங்கள். சரியான அளவு காவல்துறையை போட்டு இருக்க வேண்டும். 500 போலீசார் அங்கு இல்லை. இவ்வளவு பேர் கூடும் இடத்தில் குறைந்த காவலர்களை கொண்டு இவர்கள் என்ன பாதுகாப்பு கொடுத்திருக்கின்றனர்.
ஒரு பொது இடத்தில் காவல்துறை அனுமதி கொடுக்கும் போது 100 தடவை யோசிக்க வேண்டும். வேலுச்சாமிபுரத்தில் ஆம்புலன்சே போகாத ஒரு சந்தில் அனுமதி கொடுத்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர், எஸ்பி இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் சஸ்பெண்டாவது செய்யணும். மற்ற அதிகாரிகளுக்கு இது எச்சரிக்கையாக அமையும்.
மாவட்ட கலெக்டர், எஸ்பி மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன ஒரு பம்மாத்து வேலை பண்ணிட்டு இருக்கார்? இந்தியாவில் 10, 15 பேர் உயிரிழக்கின்றனர் என்றால் பல அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றன.
இந்திய விமான சாகச கண்காட்சியின் போது, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சென்று பார்க்கின்றனர். 5 பேர் இறக்கின்றனர். 71 பேர் மருத்துவமனையில் அட்மிட் ஆகின்றனர். தமிழகத்தில் அதிகம் பேர் சேரும் எந்த இடத்திலும்கூட திமுக தனது 4 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் எதையும் சரிவர கவனிக்கவில்லை.
சம்பவம் நடந்தபின்னர் வருவதற்கு முதல்வரா? இல்லை… ஆய்வுக் கூட்டம் நடத்தி அறிவுரைகள் கொடுக்கின்றனரா? எனவே முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறுவது சரியான கருத்து.
ஒருநபர் விசாரணை ஆணையம் என்பது போதாது. உடனடியாக CBI விசாரணை வேண்டும். தாமாக முன் வந்து CBI விசாரணையை முதல்வர் கேட்க வேண்டும்.
அந்த கூட்டத்தில் யாராவது விஷக்கிருமிகள் இருந்து கூட்டத்தினரை தூண்டிவிட்டனரா? ஆம்புலன்ஸ் எப்போது வந்தது? தடியடி எதற்காக நடத்தினார்கள்? கரண்ட் எதற்காக போனது? இந்த எல்லா விஷயங்களையும் CBI நுணுக்கமாக விசாரிக்க வேண்டும். ஏன் என்றால் கூட்டத்தில் செருப்பு வீசுகின்றனர்.
ஒரு கூட்டத்தில் தலைவன் பேசும்போது அங்கே இருக்கிற யாரும் செருப்பு வீசமாட்டாங்க, வெளியாள் தான் வீசியிருப்பான். ஏன் கரண்ட் கட் ஆனது என்று CBI விசாரிக்க வேண்டும். இனி தமிழகத்தில் எங்கும் இது போன்று சம்பவம் நடக்கக்கூடாது.
எங்களின் குற்றச்சாட்டு விஜய் மீது உள்ளது. ஒரு நடிகரை பார்க்க சினிமா ஸ்டாரை பார்க்க கிராமத்தில் இருந்து மக்கள் வரத்தான் செய்வார்கள். மொத்தம் கரூர் மாவட்டத்திற்கும் ஒரே இடத்தில் தான் பேச அனுமதி. மற்ற அரசியல் கட்சிகள் என்ன பண்ணுகிறார்கள் என்றால் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பாயிண்ட் அமைக்கின்றனர்.
பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் உயிரிழந்த பரிதாபம் ஒரே பாயிண்ட் வைத்தால் 20 ஆயிரம், 30 ஆயிரம் பேர் வராமல் என்ன செய்வார்கள்? அதிலும் வார இறுதியில் வைக்கிறீர்கள், சனிக்கிழமை என்னும் போது மக்கள் அனைவரும் வரத்தான் செய்வார்கள். சனிக்கிழமை வைத்தால் குழந்தையை அழைத்துக் கொண்டு வரத்தான் செய்வார்கள்.
இவ்வாறு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

