பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துரந்தர் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக நேற்று கட்டணத்துடன் கூடிய ப்ரீமியர் ஷோக்கள் நடத்தப்பட்டன.
இருப்பினும் நேற்று ப்ரீமியர் ஷோக்கள் சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இன்று காலை முதலே துரந்தர் படத்துடைய காட்சிகள் வெற்றிகரகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் பாகம் தியேட்டர் ரிலீசில் மட்டும் ரூ. 1300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனால் 2 ஆம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் அதனை பூர்த்தி செய்துள்ளதாக எக்ஸ் தளத்தில் சினிமா ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
முதல் பாகத்தில் ரஹ்மான் டெகாய்ட் கேரக்டரில் நடித்த அக்சய் கன்னா 2ஆம் பாகத்தில் இடம்பெறாவிட்டாலும் ரன்வீர் சிங், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோரின் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
உண்மை சம்பவங்களை தழுவி இந்த படத்தை இயக்குனர் ஆதித்யா தார் உருவாக்கியுள்ளார். படத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஊரி தாக்குதல் உள்ளிட்ட முக்கிய சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
முதல் பாதி மெதுவாக ஆரம்பித்தாலும் அடுத்தடுத்த காட்சிகள் மற்றும் இடைவேளைக்கு பிறகு படத்தின் வேகம் அதிகரிப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதல் பாகம் பார்த்தவர்களுக்கும் 2ஆவது பாகத்தில் அதிர்ச்சி தரக்கூடிய ட்விஸ்டுகள் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். முதல் பாகம் பார்த்திடாதவர்களுக்கு 2ஆவது பாகம் புரிவதற்கு வாய்ப்பு இல்லை.
மொத்தத்தில் இந்த படம் துரந்தர் முதல் பாகத்தை விடவும் அதிக தொகையை வசூலிக்கும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

