சமூகம்சினிமா

வயதானவர்களை இழிவுபடுத்துகிறது; தனுஷின் தாய் கிழவி பாடலுக்கு எதிர்ப்பு !

இசையமைப்பாளர் அனிருத், நடிகர் தனுஷ் கூட்டணியில், சமீபத்தில் வெளியான தாய் கிழவி பாடலுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

திருச்சிற்றம்பலம் படம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். இத்திரைப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 7ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ், அனிருத் கூட்டணி இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் வெளியான ‘3’ வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் போன்ற அனைத்து படங்களின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

thaai kizhavi song

தாய் கிழவி பாடல்

இந்நிலையில், படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பெயரில் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியானது. தாய் கிழவி என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடல் யூ-ட்யூபில் இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

கண்டனம்

இதனிடையே இந்த பாடலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘வயதான உறவுகளை தாத்தா, பாட்டி என்று மரியாதையோடு அழைத்து மகிழ்ந்த காலம் போய் தற்போது அதனை சீரழிக்கும் வகையில் இந்த தாய்க்கிழவி பாடல் உள்ளது.

தரக்குறைவான வரிகள்

தரக்குறைவான வரிகளைக் கொண்டு திருச்சிற்றம்பலம் படத்திற்காக பாடல் எழுதி பாடி தவறான முன்னுதாரணமாகியுள்ள நடிகர் தனுஷ் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வளரும் தலைமுறையினர் மத்தியில் மூத்த வயதான உறவுகளை தவறாக அழைக்கும் எண்ணத்தை விதைக்கும் வகையில் திருச்சிற்றம்பலம் படத்தில் உள்ள அந்த பாடலின் வரிகள் உள்ளது.

அதனால் உடனடியாக அந்த வரிகளை நீக்கி விட்டு பாடலை வெளியிட வேண்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு பால் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts