நாட்டின் அதிவேக முதல் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி மீரட்டில் இன்று துவக்கி வைத்தார்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய ரயில்களை மத்திய ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வந்தே பாரத் ரயிலில் ஆரம்பித்த இந்த ரயில்வே நவீனமயமாக்கல் தற்போது புல்லட் ரயில் சேவையை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்நிலையில், விரைவு ரயில் சேவையின் முன்னோட்டமாக டெல்லியில் இருந்து மீரட் வரைக்கும் செல்லும் வகையில், புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயிலுக்கு நமோ பாரத் என்று பெயரிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மோடிபுரத்திற்கும், டெல்லியின் சராய் கலே கானுக்கும் இடையேயான இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 82.15 கிலோ மீட்டர் தொலைவை, இனி பயணிகள் 55 நிமிடங்களில் சென்றடைலாம்.
பயண நேரம் மற்றும் கூட்ட நெரிசலை குறைப்பது, நகர்புற போக்குவரத்தில் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பிராந்திய போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் மத்திய அரசு நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நமோ பாரத் ரயில் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 12,930 கோடி ரூபாய் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல்லிக்கும், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டுக்கும் இடையே மொத்தம் 82.15 கிலோ மீட்டர் தூரம் நமோ பாரத் அதிவேக மெட்ரோ ரயில் பயணிக்கும். இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் பயணிக்கும். டெல்லியின் சராய் கலே கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்தை ‘நமோ பாரத்’ 55 நிமிடங்களில் சென்றடையும்.
மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.மீரட் தெற்கு மற்றும் மோடிபுரம் பணிமனைக்கு இடையேயான 23 கிலோமீட்டர் தொலைவுக்கு மணிக்கு 120 கிலோமீட்டர் இயக்கும் விதத்தில் ‘நமோ பாரத்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள்: நியூ அசோக் நகர், ஆனந்த் விகார், சஹிபாபாத், காஜியாபாத். மோடி நகர் தெற்கு, மீரட் தெற்கு, சதாப்தி நகர், பேகம்புல், மோடிபுரம் உள்பட மொத்தம் 16 ரயில் நிறுத்தங்கள்.
வேகம்: மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்துக்கு இயக்கத்தக்க விதத்தில் நமோ பாரத் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 90 கிமீ சராசரி வேகத்துடன் 160 கிலோமீட்டர் வேகம் வரை இயக்கப்படும்.
ரயில் வடிவமைப்பு: வலது மற்றும் இடபுறம் தலா இரண்டு இருக்கைகள் வரிசை கொண்ட மொத்தம் 173 இருக்கைகள் (இவற்றில் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட பயணிகள் அமரலாம்), மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி, பயணிகளின் உடைமைகளை வைக்க பிரத்யேக இடம் (ரேக்) இரண்டுக்கு கண்ணாடி ஜன்னல், தானியங்கி கதவுகள், சிசிடிவி, புகை கண்டுபிடிப்பான், செல்ஃபோன் சார்ஜிங், ரயில் நிலையங்கள் குறித்த பொது அறிவிப்பு ஏற்பாடு போன்ற நவீன வசதிகளுடன் ‘நமோ பாரத்’ மெட்ரோ ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் மூலம் ஏறி இறங்க வசதி, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு என ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கைகள், அனைத்து ரயில் நிலையங்களிலும் லிஃப்ட் வசதி என பல்வேறு சிறப்பம்சங்களுடன் நமோ பாரத் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

